ஐபோன் 13: தமிழகத்தில் சோதனை தயாரிப்பை தொடங்கியது ஆப்பிள்
21 Dec,2021
சென்னை: ஆப்பிள் நிறுவனம் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 13-ன் சோதனை தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. பிப்ரவரிக்குள் உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வணிக தயாரிப்பை தொடங்கும் என தொழில்துறையினர் தெரிவித்தனர்.
ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸில் உள்ள மூன்று போன்களில் ஐபோன் 13 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது. ஆப்பிள் ஏற்கனவே ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்களை பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கிறது. ஐபோன் சிறப்பு பதிப்பை பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் ஆலையில் தயாரித்து வருகிறது. அதில் 70% இந்தியாவில் விற்பனையாகிறது. 20 முதல் 30% உலக சந்தையில் விற்கப்படுகிறது.
தற்போது உலகளவில் செமிகண்டக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் சிப்புகள் சப்ளையை உறுதிப்படுத்தியது. அது இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்க உதவியுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டிலிருந்தே வேலை போன்ற காரணங்களால் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை கடந்த 2 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது.
2020-ல் 30 லட்சம் யூனிட்களாக இருந்த ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை, நடப்பாண்டில் 40 லட்சம் ஆக இருக்குமென எதிர்பார்க்கிறார்கள். ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 2020-ல் ரூ.1,226 கோடியாக உள்ளது.