தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
17 Dec,2021
இந்தியாவை உலுக்கிய தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நீதிமன்றத்தில் காவல் அதிகாரி ஒருவர் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இருவரும், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.
இதனால் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தியதாகவும், இருவரும் உயிரிழந்த நிலையில் ஆவணங்களை மாற்றியதோடு தந்தை, மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.