பெட்ரோல் டீசல் மூலம் ரூ.8 லட்சம் கோடி வருமானம்.. நிர்மலா சொன்ன அதிர்ச்சி நியூஸ்!
15 Dec,2021
மூன்று ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மூலம் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிய மத்திய அரசு.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்னும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
இந்நிலையில், கடந்த மூன்று நிதியாண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் மூலம் மத்திய அரசு 8.02 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் 2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் 3.71 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஈட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்ய சபாவில் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “கடந்த மூன்று ஆண்டுகளில் செஸ் வரி உள்பட பெட்ரோல் டீசலுக்கு வசூலிக்கப்பட்ட மத்திய கலால் வரி வருவாய் விவரங்கள்: 2018-19ஆம் ஆண்டில் ரூ.2,10,282 கோடி, 2019-20ஆம் ஆண்டில் ரூ.2,19,750 கோடி, 2020-21ஆம் ஆண்டில் ரூ.3,71,908 கோடி” என்று தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நிலவரப்படி முறையே ரூ.32.98 மற்றும் ரூ.31.83 என இருந்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முறையே ரூ.27.90 மற்றும் ரூ.21.80 ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.