பாலியல் தொழிலாளிகளுக்கு. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
14 Dec,2021
பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதற்காக, பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டுமென மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் கார்டு மற்றும் அடையாள அட்டைகளை வழங்க வேண்டுமென மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததற்கு எந்த காரணமும் இல்லை.
ஒவ்வொரு குடிமகனுக்கும் தொழிலை கடந்து அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆக, பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை வழங்க மாநில அரசுகள், மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலாளர்களுக்கு நான்கு வாரங்களுக்குள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.