மணிகண்டன் விஷம் அருந்தியுள்ளார்: போலீசார் தாக்கி இறக்கவில்லை- ஏடிஜிபி விளக்கம்
14 Dec,2021
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தால் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சயுடன் முதுகுளத்தூர் வந்துள்ளார். போலீசார் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டிபிடித்து மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்தது காவல் நிலையதிற்கு விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன் மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். நடக்க கூட முடியாமல் மணிகண்டனை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடைந்துள்ளார். அதனையடுத்து, மணிகண்டனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கில் மணிகண்டன் உடலை மறுபிரதேச பரிசோதனை செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன், ‘மணிகண்டன் கைது செய்யப்பட்ட அன்று இரவு 8:15 மணிக்கு பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். மணிகண்டன் நல்ல முறையில் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளது கேமராவில் பதிவாகி உள்ளது. அன்றிரவு வீட்டில் அவர் இறந்து உள்ளார். டி.எஸ்.பி தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. பரமக்குடி ஆர்டிஓ விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை இரண்டு மருத்துவர்களை வைத்து, குடும்பத்தினர் ஒருவர் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு படி மறு பிரேத பரிசோதனை நடத்தபட்டது.
டிசம்பர் 8 அன்று தடய அறிவியல் நிபுணர் குழு மறு பிரேத பரிசோதனை செய்தது. நேற்று மறு பரிசோதனை முடிவு அளிக்கப்பட்டு உள்ளது. மணிகண்டன் விஷம் அருந்தி இறந்து உள்ளார். மறு பிரேத பரிசோதனை ஆய்வில் உள்ளது. காவல் துறை தாக்கியதில் அவர் இறக்கவில்லை என்பது உறுதியாகிறது. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பகிர கூடாது. முதல் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது தான் வெளியாகி உள்ளது. அவர் எதனால் விஷம் அருந்தினார் என விசாரணை நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 அன்று இரவு மணிகண்டன் இறந்த நேரம் தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.