தமிழகத்தில் டிச.31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: டிச.31., ஜன.1 கடற்கரை செல்ல தடை
13 Dec,2021
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி கடற்கரை செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 15-ந் தேதியுடன் கோவிட் ஊரடங்கு உத்தரவு காலம் முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கோவிட் கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்-வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதா கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். கோவிட் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
*அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.
*6 முதல் 12 வரை பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது