ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் போது அர்பணிப்புடன் செயல்பட்ட மக்களுக்கு மருத்துவ ஆலோசனை உதவி
13 Dec,2021
நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான மருத்துவ ஆலோசனை உதவிகளை ராணுவ மருத்துவமனை ஏற்கும் என தக்ஷீனா பாரத் ஏரியாவின் ராணுவ படை தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் அருண் அறிவித்துள்ளார்.
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தின் போது கிராமத்தை சேர்ந்த மக்கள் செய்த பேருதவி குறித்து தற்போது நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் லெப்டினன்ட் ஜெனரல் அருண்.
அவர் கூறுகையில், மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நன்றி. ஹெலிகாப்டர் விழுந்து நெருப்பு பற்றி எரிந்த நிலையிலும் மீட்பு பணியை செய்தீர்கள். உங்கள் வீட்டில் உள்ள பெட் ஷீட் உள்ளிட்ட பொருட்களை மூலம் மீட்பு உதவியில் இறங்கினீர்கள். நீங்கள் செய்த உதவி விலை மதிப்பற்றது.
விபத்தின் போது அர்பணிப்புடன் செயல்பட்ட நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான மருத்துவ ஆலோசனை உதவிகளை ராணுவ மருத்துவமனை ஏற்கும். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்.
ஹெலிகாப்டர் கீழே விழுந்ததை முதலில் பார்த்தவருக்கு ரூ 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள் என கூறியுள்ளார்.