Omicron வகை கொரோனா வைரஸ் உருவானது எப்படி?
13 Dec,2021
கனடா மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட இந்திய ஆய்வாளர்கள் குழு ஒன்று, Omicron வகை கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்த ஒரு விடயத்தைக் கண்டுபிடித்துள்ளது.
அந்த குழுவிலுள்ள இந்திய ஆய்வாளர்கள், ஏற்கனவே கொரோனா தாக்கிய ஒருவரின் உடலிலிருந்த ஒரு கொரோனா வைரஸ், தனது மரபணு அமைப்பை மாற்றிக்கொண்டு, Omicron வகை கொரோனா வைரஸாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
அதாவது, ஒருவர் சாதாரண ஜலதோஷத்தை உருவாக்கக்கூடிய கொரோனா வைரஸ்களில் ஒன்றான HCoV-229E வைரஸ் போன்ற ஒன்றின் தொற்றுக்கு ஆளாகியிருந்தபோது, எளிமையாக கூறினால், கொரோனா தொற்றிய ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்திருந்தபோது, இரண்டு வைரஸ்களும் இணைந்து, அதாவது ஜலதோஷ வைரஸும், கொரோனா வைரஸும் இணைந்து, மரபணுக்களை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, புதிதாக உருவாக்கிய வைரஸ்தான், 50 மரபணு மாற்றங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த Omicron வகை கொரோனா வைரஸ் என்கிறார்கள் அவர்கள்.
Omicron வகை கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்களை, இதற்கு முந்தைய மரபணு மாற்ற கொரோனா வைரஸ்களுடனும், ஏற்கனவே இருக்கும் 1,523 கொரோனா வைரஸ்களுடனும் தாங்கள் ஒப்பிட்டபோது, Omicron வகை கொரோனா வைரஸின் spike புரதத்தில், வேறெந்த வைரஸிலும் இல்லாத, தனிப்பட்ட, 26 அமினோ அமில திடீர் மாற்றங்கள் இருந்ததைக் கண்டுபிடித்ததாக அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவற்றில் 23 திடீர் மாற்றங்கள் வேறொரு புரதத்தை ஈடு செய்திருந்தவை, 2 நீக்கப்பட்டவை, மற்றும் ஒன்று இணைப்பு வகை திடீர் மாற்றங்களாகும்.
இந்த இணைப்பு வகை மரபணு மாற்றம், Omicron வகை வைரஸைத் தவிர்த்து, இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வேறு எந்த கொரோனா வைரஸ்களிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.