'மிஸ் யுனிவர்ஸ்' 70ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து அப்பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் இந்தப் போட்டி நடந்தது. இதில் 80 உலக நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றிருந்தார் ஹர்னாஸ் சந்து.
2020ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவெர்ஸ் ஆண்ட்ரியா மேசா, ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2000ஆவது ஆண்டில் லாரா தத்தா வென்றார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994ல் வென்றிருந்தார். எனவே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஹர்னாஸ் சந்து.
தமது பெற்றோர், கடவுள் மற்றும் மிஸ் இந்தியா அமைப்புக்கு தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.
கடைசி சுற்று கேள்வி: ஹர்னாஸ் சந்து பதிலென்ன?
இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்றைய அழுத்தங்களுக்கு அவர் அளிக்கும் ஆலோசனை என்ன என்று போட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "தங்களை நம்ப வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய அழுத்தம். நாம் வேறுபட்டவர் என்பதை அறிவது உங்களை அழகாக்கும். பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு, நம்மைச் சுற்றிலும் நடப்பவை பற்றி பேசத் தொடங்குவோம்," என்று பதிலளித்தார் ஹர்னாஸ் சந்து.
"உங்களுக்காக நீங்களே பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை வழிநடத்துபவர் நீங்கள்தான். உங்களுக்காக குரல்கொடுக்க வேண்டியது நீங்கள்தான். நான் என்னை நம்புகிறேன் அதனால்தான் இங்கே நிற்கிறேன்," என்று அவர் கூறினார்.
2017இல் 'மிஸ் சண்டிகர்' பட்டத்தை வென்றவர் ஹர்னாஸ் சந்து. மேலும் 2021ஆம் ஆண்டில் லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார்.
17 வயது முதலே மாடலிங் செய்து வரும் ஹர்னாஸ் சந்து, சில பஞ்சாபி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்று பிடிஐ முகமை உட்பட பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியாகி உள்ளது. இவரது குடும்பம் சண்டிகரில் வசிக்கிறது.
இப்போட்டியில் பராகுவேவைச் சேர்ந்த நாதியா ஃபெர்ரெய்ரா (வயது 22) இரண்டாமிடத்தையும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லலேலா ஸ்வான் (வயது 24) மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
தேர்வாளர்கள் கமிட்டியிலும் இந்தியாவைச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ஊர்வசி ரவுதாலா இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.