சீன நிறுவனத்துடன் இஸ்ரோ புதிய தொழில் ஒப்பந்தம் இட்டுள்ளது.
11 Dec,2021
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் லடாக் எல்லை விவகாரத்தை அடுத்து தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆனாலும் சில வர்த்தக ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கவே செய்கின்றன.
இதற்கு உதாரணமாக தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ உடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இட்டுள்ளது.
ஸ்மார்ட் போன் குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பத்தில் எதிர்கால ஆய்வு மற்றும் வளர்ச்சி கருவி இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. இந்திய தேசத்தில் பயண சேவைகளை அளிக்கும் நேவ்ஐசி சிஸ்டம் எனப்படும் தொழில்நுட்பம் கூகுள் மேப் போல செயல்படும் தன்மை கொண்டது.
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் நபர் தான் நாட்டின் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை இதன்மூலம் துல்லியமாக அறியமுடியும். இந்த தொழில்நுட்பம் வழிகாட்டுவதற்கு மட்டுமல்லாமல் குறுஞ் செய்திகளை அனுப்பவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரோ மற்றும் ஒப்போ இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக்கொள்ளும். குக்கிராமங்களிலும் சமுத்திரங்களின் நடுவிலும் சிக்கிக் கொண்டாலும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவசர குறுஞ்செய்தி அனுப்பி மற்றவர்களிடம் உதவி கேட்க முடியும்.
இதுகுறித்து ஒப்போ இந்தியா துணைத் தலைவர் தஸ்லீம் ஆரிப் கூறுகையில் இஸ்ரோவுடன் ஒப்போ இந்தியா இட்ட இந்த ஒப்பந்தத்தை அடுத்து ஒப்போ இந்தியா 'மேக் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அதிக முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள உள்ளது. நேவ்ஐசி தொழில்நுட்பம் மூலமாக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் ஓர் புதிய அனுபவத்தை பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.