தொழில்துறை வளர்ச்சிக்கு வங்கிக்கடன் வட்டித்தொகை குறையவேண்டும் என்று சமுதாய ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. இன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு கடன்களை அள்ளி தருகின்றன. தொழிலில் லாபம் ஈட்டினாலும் சிலர் கடன் தொகையை ஏய்க்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுக்கப்படாத கடன் பயனற்றதாகி விடும். இதை அனைத்து வங்கி மேலாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் பெற வருபவரிடம் தவணை முறையில் சந்தேகங்களை எழுப்பாமல் ஒரே நேரத்தில் அலுவல்களை முடிக்க வேண்டும்.
வங்கியில் நுழைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கிக்கடன் பெறுவது இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். வங்கிகள் பல்வேறு திட்டங்களை தீட்டினாலும், அதனை செயல்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் கிளை மேலாளர்கள் ஆவர். இவர்கள் தங்கள் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
வங்கிகளில் வேளாண் வளர்ச்சி அதிகாரி மற்றும் தொழில் வளர்ச்சி அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நிறுவனங்களை தேடிச்சென்று தொழில்கடன்களை வழங்கவேண்டும். கடன் கோருபவரின் தொழில் திட்டம் பயனுடையது? தொழில் திட்டம் பயனுடையதா? தொழில்நுட்ப ரீதியாக வெற்றி பெறக்கூடியதா? என்பதை கண்டறிந்து கடன்களை உடனடியாக ஒதுக்க வேண்டும்.சிலர் கடன் கிடைத்தவுடன் ஏ.சி., கார், அலுவலக தளவாடங்கள் என ஆடம்பர செலவுகளை மேற்கொள்கிறார்கள். இதனால் கடன் பெறுவதற்கான நோக்கம் சிதைந்து தொழில் நசிந்து விடுகிறது. இதனை தவிர்த்தால், கடன் தொகையை திருப்பி செலுத்தும் அளவிற்கு தொழில் வெற்றிடையும். கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்தினால் தொடர்ந்து வங்கிகள் கடன் அளிக்கும்.
பணப்பற்றாக்குறை, நிர்வாக சீர்கேடு, தொழில்நுட்பத்தில் குளறுபடி, நடைமுறை சிக்கல்கள், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் எந்த தொழில் நிறுவனமும் தோல்வி அடையாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் சிக்கலா? உடனடியாக வங்கி மேலாளரை அணுகி விளக்கம் அளிக்க வேண்டும்.
மருத்துவர், வழக்கறிஞரிடம் வெளிப்படையாக பேசுவது போல் வங்கி மேலாளரிடமும் வெளிப்படையாக சிக்கலை விவாதியுங்கள். வங்கி உங்களுக்கு உதவ முன்வரலாம். ஆனால் வங்கிகளிடம் இருந்து கண்மறைவாய் ஒளியும் போது தான வங்கி கோபமடைகிறது.
வங்கி மேலாளருக்கும், கடனாளிக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இருக்க வேண்டும். உண்மை பேசி, வெளிப்படையாக சிக்கலை அணுகினால் இரண்டாவது முறையும் கடன் அளிக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. தொழிலில் லாபம் சம்பாதித்தாலும் சிலர் கடன் தொகையை ஏய்க்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனை தவிர்க்க வேண்டும்.
வங்கிகளில் விவசாய கடன்களிலும் புது நடைமுறையை கடைப்பிடிக்கலாம். கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக முதல் பயிர் தோல்வி அடைந்தால், இரண்டாவது பயிருக்கு கடன் அளிக்கலாம். அதன் மூலம் சிக்கலில் இருந்து விடுபடலாம் அல்லவா? விவசாயிகளின் சிக்கலை தீர்க்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டுமே தவிர, தற்காலிக தீர்வுகளை தள்ளுபடி என்ற போர்வையில் தரக்கூடாது. இதனால் வேளாண்மை மட்டுமல்ல, விவசாயிகளும் பயனடைவர். அது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம் ஆகும்.“கடன் கொடுத்த வங்கியும் கடனை மறந்து விடுகிறது. கடனாளிகளும் கடனை மறந்து விடுகிறார்கள். கவனிக்காத பயிரும் பாழ், கேட்காத கடனும் பாழ்” என ஒரு பழமொழி உண்டு.
கடன்களை வழங்குவதில் தனியார் வங்கிகள் கடைப்பிடிக்கும் நடைமுறைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடைப்பிடிக்கலாம். ஆனால் கடன் தொகையை வசூலிப்பதில் அவர்களின் நடைமுறையை பிற்பற்றக்கூடாது. கடன்களை வழங்குவதற்கான நடைமுறையை மேலும் எளிமையாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு கடன்களுக்கான வட்டியும் குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியை அடையவேண்டுமானால், தொழில், விவசாய மற்றும் சிறுகடன்களுக்கான வட்டிவிகிதத்தை அதிரடியாக அதே போல் வைப்பு நிதிகளுக்கும் வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டும். தற்போது தொழில், விவசாய கடன்களில் விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடன் கொடுத்தல், வைப்பு நிதி பெறுதல் ஆகியவற்றின் மீதான வட்டியில் வங்கிகளுக்கு 3 சதவீதம் நிகர லாபம் இருந்தால் மட்டுமே வங்கி நிர்வாகம் சீராக அமையும். கடனுக்கான வட்டி குறைவாக இருந்தால் கடன் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மறைமுகமாக நாட்டின் வளர்ச்சி உயர்ந்துகொண்டே இருக்கும். கடன் பெறுபவர்களும் முறையாக கடன் தொகையை திரும்ப செலுத்தினால் மீண்டும், மீண்டும் கடன் பெற்று தொழிலை பெருக்கலாம்.
எனவே, வங்கியாளர்கள் மற்றும் கடன்பெறுவோர் இணைந்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். வங்கிகள் அணுகமுடியாத இடம் அல்ல. அது நம்முடைய தாய் வீடு என்ற உணர்வை ஏற்படுத்தவும், நண்பர்களிடம் கடன் கேட்பது போல் அவர்களை அணுகலாம்