சர்வதேச பயணியர் விமான சேவை: 2022 ஜன.,31 வரை தடை நீட்டிப்பு
10 Dec,2021
சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடை, 2022 ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக, 2020 மார்ச் 23 முதல் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச பயணியர் விமான சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், இம்மாதம், 15ம் தேதி முதல் வழக்கமான சர்வதேச பயணியர் விமான சேவை துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய 'ஒமைக்ரான்' கொரோனா பரவல் காரணமாக, விமான சேவையை துவக்குவது தள்ளி வைக்கப்படுவதாக, கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடை, 2022, ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட, 32 நாடுகளுக்கான சிறப்பு விமான சேவை தொடரும்.