இந்தியாவின் முப்படை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது சீனாவின் சதியாக இருக்கலாம் என்று இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின், நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் இராணுவ மையத்தில் நடைபெறவிருந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர், அதன் பின் கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் விமான படை தளத்தில் இருந்து தன்னுடைய குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேர், அங்கிருந்த இராணுவ ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர்.
அப்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியதால் பிபின் ராவத் உட்பட 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் ஹெலிகொப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன், வருண் சிங் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவிக்கையில்,
பிபின் ராவத் இறப்பு மிகப்பெரிய விஷயம். ஏனெனில், இராணுவத்தில் அவர் போன்ற உயர் பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளில் சிலர் தான் சீனாவைப் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அரசுக்கு பயப்படாமல், சீனா, இந்தியாவிற்கு தொல்லை அளித்து வருகிறது, சீனா நமக்கு ஒரு ஆபத்து, சீனா நமது எல்லைக்குள் வந்து விட்டது என்று கூறியவர். இதனால் என்னைப் பொறுத்தவரை நான் இதை cyber warfare தாக்குதலாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
ஏனெனில், லேசர் மூலமாக தொழில்நுட்ப மாறுபாடுகளை ஏற்படுத்த முடியும். இதுவும் அதுபோன்ற ஒன்றாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் உள்ளது. சீனா ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம்.
தேச ஒருமைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. நாம் இந்த விஷயத்தில் கடுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விஷயங்களில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தைவானின் முக்கிய இராணுவ தலைவராக இருந்த, ஜெனரல் ஷென் யி-மிங் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் அவர் உட்பட 13 பேர் பலியானார்கள். இதன் பின்னணியிலும் சீனா தான் இருப்பதாக அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.