ஆரோவில் சர்வதேச நகரம், அன்னையின் கனவு திட்டம் என்பதால், எதிர்ப்பாளர்களை மீறி 2.8 கி.மீ., தொலைவிற்கு கிரவுன் சாலை மேம்பாட்டு பணியை ஆரம்பிக்க, ஆரோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
புதுச்சேரி அருகே 12 கி.மீ., தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.
இங்குள்ள கிரவுன் சாலை திட்டத்திற்காக, அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை கடந்த 4ம் தேதி முதல் நகர வளர்ச்சிக் குழு துவக்கியது.இதில், ஆரோவில் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள 30 ஆண்டு கால மரங்கள் வெட்டப்பட்டன.இதற்கு ஆரோவில் வாசிகளின் ஒருதரப்பினர் தற்போது எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் ஆரோவிலில் கடந்த மூன்று நாட்களாக கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடக்கிறது
ஆரோவில் சர்வதேச நகரம் கடந்த 1968ம் ஆண்டு பிப்., 28ம் தேதி உலகின் 124 நாடுகள் மற்றும் இந்தியாவின் 23 மாநிலங்களில் கைப்பிடி மண் மற்றும் தாமரை மொட்டு வைத்து துவக்கப்பட்டதுஅப்போது, மொத்தம் 50 ஆயிரம் பேர் வசிக்க கூடிய அளவிற்கு ஆரோவில் 'மாஸ்டர் பிளான்' வடிமைக்கப்பட்டது. ஆனால் தற்போது 3,200 பேர் வரை தான் அங்கு வசிக்கின்றனர்.பல்வேறு நாடுகளின் நிதியுதவியுடன் பல ஆண்டுகளாக பணி நடந்ததும், இன்னும் ஆரோவில் தன் முழு இலக்கினை எட்டவில்லை.
அண்மையில் தமிழக கவர்னர் ரவி தலைமையில் ஆரோவில் நிர்வாக குழு கூடியது. அதில் பல ஆண்டுகளாக அன்னையின் கனவு இலக்கு எட்டப்படாமல் இருப்பதை அறிந்து, பணிகளை வேகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே, கிரவுன் சாலை பணி திட்டம், ஆரோவில் அடுத்தக்கட்ட வளர்ச்சி பணி துவக்கப்பட்டுள்ளது. ஆரோவில்லின் ஆன்மா எனப்படும் மாத்ரி மந்திர் அருகில் உள்ள ஆலமரம் தான் ஆரோவில்லின் மையமாகும். அதில் இருந்து 690 மீட்டர் சுற்றளவு தொலைவில் வட்டமாக 4.3 கி.மீ., தொலைவிற்கு கிரவுன் சாலை திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் ஏற்கனவே 1.5 கி.மீ., கிரவுன் சாலை திட்டம் விரிவாக்க பணி நடந்துவிட்டது.மீதமுள்ள 2.8 கி.மீ., பணி நடைபெற உள்ளது. இந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு ஆரோவில் குடியிருப்பு வாசிகளின் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆரோவில் தக்காலி, யூத் சென்டர், ஆரோ டேம் உள்ளிட்ட இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் உள்ள 500 மரங்களை வெட்ட கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல ஆண்டுகள் வளர்ந்துள்ள மரங்களை அழிக்காமல் மாஸ்டர் பிளானை சற்றே மாற்றியமைத்து சாலை போடலாம் என்பது எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால் அன்னையின் கனவு திட்டம் என்பதால் ஒரு பிரிவினரின் எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாமல் ஆரோவில் நிர்வாகம் கிரவுன் சாலை திட்டத்தை செயல்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் களத்தில் இறங்கி உள்ளதால் உச்சக்கட்ட டென்ஷன் ஏற்பட்டு உள்ளது.
மாற்றம் சாத்தியமா
ஆரோவில் நகரம், கேலக்ஸி போன்று மூன்று வட்ட வடிவில் அமைய உள்ளது.முதல் வட்டத்தில் ஆரோவில் நகரத்தின் மையப் பகுதி அமைதிப் பகுதியாகும். அதில் மாத்ரி மந்திர், தோட்டங்கள், ஆம்பி தியேட்டர் அமைந்துள்ளன.இரண்டாவது வட்டத்தில் அமைதிப் பகுதியின் வடக்கே 109 ஹெக்டேர் பரப்பளவில் தொழில் மண்டலம், மேற்கே 74 ஹெக்டேர் பரப்பளவில் பன்னாட்டு மண்டலம், கிழக்கே 93 ஹெக்டேர் பரப்பளவில் பண்பாட்டு மண்டலம் அமைந்துள்ளது.
வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் பூங்காக்களை எல்லையாகக் கொண்டு 189 ஹெக்டேர் பரப்பளவில் குடியிருப்பு அமைந்து உள்ளது.
மூன்றாவது வட்டத்தில் பசுமை வளையப் பகுதி, தற்போது 405 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுஉள்ளது. இதில் இரண்டாவது வட்டத்தில் உள்ள தொழில் மண்டலம், பன்னாட்டு மண்டலம், பண்பாட்டு மண்டலம், குடியிருப்பு மண்டலத்தினை ஒருங்கிணைக்க 4.3 கி.மி., தொலைவிற்கு கிரவுன் சாலை 16.7 மீட்டர் தொலைவிற்கு போடப்பட உள்ளது.
இதில் 6.7 மீட்டர் அகலத்திற்கு மட்டும் நடுவில் சாலை அமைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 10 மீட்டர்கள் சாலையின் இருபுறமும் மின்சார புதைவட கேபிள், பைபர் ஒயர்கள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் மாற்றம் செய்தால் அன்னையின் கனவு திட்டத்தில் மாற்றம் செய்வதாகிவிடும் என்பதால் ஆரோவில் நிர்வாகம் கைவிரித்துவிட்டது. எதிர்ப்புகளை தாண்டி செயல்படுத்த தயாராகி வருகிறது.
விரும்பவில்லை
ஆரோவில்லில் மரங்களை வெட்ட எதிர்ப்பு கிளப்பியுள்ளதால் அரசியல்வாதிகள் மாறிமாறி அறிக்கை வெளியிட்டு அரசியலாகி வருகின்றனர். ஆனால் ஆரோவில்லில் அரசியல் புகுவதை ஆரோவில்வாசிகளே விரும்பவில்லை.
ஆரோவில் சமுதாயம் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஆரோவில் அவை செயற்குழு போன்ற குழுக்களுக்கு ஆரோவில் நிர்வாகத்தில் பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு அதிகாரம் என்று ஏதும் இல்லை. எல்லா முக்கிய முடிவுகளும், அதற்கென அமைக்கப்பட்டுள்ள ஆரோவில்வாசிகள் அவை அல்லது பொதுக்கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படுகின்றன.அவற்றில் ஆரோவில்வாசிகள், புதிதாய் சேர்ந்தவர்கள் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கலாம். இதன்படி பல கூட்டங்கள் நடத்தி கருத்து கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் அன்னையின் கனவு திட்டம் என்பதால் ஆரோவில் மாஸ்டர் பிளானில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது என ஆரோவில் பவுண்டேஷன் கூறி விட்டது. தற்போது வேறுவழியின்றி பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது.
10 ஆயிரம் மரக்கன்றுகள்
இது குறித்து, ஆரோவில் அலுவலக தொடர்பாளர் சிந்துஜா கூறியதாவது:ஆரோவில் மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ்தான் கிரவுன் சாலை மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் பிளானில் இந்த இடம் இருக்கிறது என்று தெரிந்து தான் இந்த மரக்கன்றுகளை நட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் தான் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த சாலை திட்டம் மூலம் தான் பன்னாட்டு மண்டலம், பண்பாட்டு மண்டலம் உட்பட நான்கு பகுதிகளை இணைக்க முடியும்.எனவே அன்னையின் திட்டத்தின்படி, கிரவுன் சாலையை எதிர்ப்பை மீறி அமைக்க உள்ளோம். வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக நான்கு மரங்கள் பசுமை வளைய பகுதியில் நடப்பட உள்ளது. வேரோடு எடுத்து உயிர்துளிக்க வாய்ப்புள்ள மரங்களும் உயிர்ப்பிக்கப்பட உள்ளது.
இதன்படி 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதால் ஆரோவில் பசுமை பாதிக்கப் படாது.ஆரோவில் யாருக்கும் சொந்தமான இடம் இல்லை என்பதும், அதனுடைய மானிட குலத்திற்கான உன்னத லட்சியமும் எதிர்ப்பு கருத்தாளர்
களுக்கு தெரியும். அன்னையின் லட்சியத்தை நிறைவேற்ற ஆரோவில் வாசிகள் அனைவருமே கரம் கோர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
என்ன சொல்கின்றனர்
எதிர் கருத்துடைய ஆரோவில்வாசிகள் கூறியதாவது:ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்க கடந்த 1968ம் ஆண்டு அடிக்கல் நாட்டியபோது சிறிய ஆலமரக்கன்று இருந்தது. இதனை வெட்டி அகற்ற நினைத்தபோது, அன்னை தடுத்தார். அந்த ஆலமரத்தினை மைய பகுதியாக கொண்டு ஆரோவில்லை உருவாக்கப்படும் என்றார்.
அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு ஆரோவில் உருவாக்கப்பட்டு வருகிறது. சிறிய ஆலமர கன்றுக்கே இரக்கம் காட்டியவர் அன்னை. அவரது வழியில், மரங்களை வெட்டாமல், பிளானில் சிறிது மாற்றம் செய்யலாம் என கருத்து தெரிவித்தோம்.நள்ளிரவில் மரக்கன்றுகளை வெட்ட வேண்டிய அவசியம் என்ன. தேவையில்லாமல் ஆரோவில்லில் பதட்டத்தை ஏற்படுத்துகின்றனர். ஆரோவில் மாஸ்டர் பிளானுக்கு நாங்கள் எதிரி இல்லை. ஆரோவில்வாசிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்