இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதி நரவானே?
09 Dec,2021
நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தமிழகத்தின் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக தற்போதைய ராணுவ தளபதி நராவானே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டில்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 அதிகாரிகளுடன் நேற்று (டிச.,8) காலை பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னுார் அருகே பனிமூட்டம் அதிகம் இருந்ததால் தாழ்வாக பறந்தததாக தெரிகிறது. இதனால் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக 2020ம் ஆண்டு ஜனவரி 20 தேதி பொறுப்பேற்றார். ராணுவ, விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.
பிபின் ராவத் மறைவால் நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 10 நாட்களுக்குள் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட உள்ளார்.
இதனடிப்படையில் தற்போதைய ராணுவ தளபதியான நரவானே அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.