சர்வதேச விமான சேவையை நிறுத்துங்கள்... பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்
02 Dec,2021
மக்களவையில் இன்று கொரோனா தொற்று தொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை குறைகூறியதுடன், கொரோனா இரண்டாவது அலையை அரசு சரியாக கையாளவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், தற்போது புதிதாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, சர்வதேச விமான சேவையை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் குறித்த திட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
விவாதத்தை ஆரம்பித்து வைத்த சிவசேனா தலைவர் விநாயக் ராவத், கொரோனா தொற்று நோய் பரவி 21 மாதங்களுக்குப் பிறகு, பாதிப்புகள் குறைந்து வரும் நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும், உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்து பேசிய அவர், மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி விநியோகம் குறித்து பேசிய ராவத், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசி அளவை அதிகமாக ஒதுக்குவதாக குற்றம் சாட்டினார். மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த குற்றச்சாட்டை பாஜக உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் மறுத்து பேசினார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மாநிலங்களிடையே எந்த பாகுபாடும் இல்லை என்று கூறிய அவர், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இரண்டும் கொரோனா பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதை பிரதிபலிக்கும் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அமோல் ராம்சிங் கோல்ஹே பேசுகையில், ஓமிக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு சர்வதேச விமானங்களை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.