2 லட்சம் பேருக்கு குடியுரிமை அமெரிக்க எம்.பி.,க்கள் மனு
02 Dec,2021
வாஷிங்டன்:அமெரிக்காவில், சிறார் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குடியுரிமையற்ற, இரண்டு லட்சம் பேரை சேர்க்கக் கோரி உள்துறை அமைச்சகத்திடம், 49 எம்.பி.,க்கள் மனு அளித்துள்ளனர்.
இந்த இரண்டு லட்சம் பேரில், பெரும்பான்மையானோர் இந்திய அமெரிக்கர்கள் ஆவர். அமெரிக்க சட்டப்படி, 'எச்-1பி' விசாவில் பணியாற்றுவோர் உட்பட, நீண்ட காலமாக குடியுரிமையின்றி உள்ளோரின் குழந்தைகள், 21 வயது பூர்த்தியானதும் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.இந்த வகையில் 'கிரீன் கார்டு' இல்லாதோர் அல்லது 'விசா' காலாவதியான பெற்றோரின், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சிறார்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, எம்.பி.,க்கள் டெபோரா ராஸ், அலெக்ஸ் படிலா ஆகியோர் தலைமையில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையைச் சேர்ந்த, 49 எம்.பி.,க்கள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறுவயதில் அமெரிக்கா வந்து, அனுமதியின்றி வசிக்கும், ஆறு லட்சத்து 40 ஆயிரம் சிறார்களை வெளியேற்றுவதை தடுக்கும் திட்டம், 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில், அமெரிக்காவில் நீண்ட காலமாக குடியுரிமையின்றி வசிக்கும் பெற்றோரின் குழந்தைகளையும் சேர்க்க வேண்டும்.
இதன் வாயிலாக, பெரும்பாலான இந்திய அமெரிக்கர்கள் அடங்கிய, இரண்டு லட்சம் பேர், 21 வயதிற்குப் பிறகும், அமெரிக்காவில் வசிக்க முடியும். இதற்கான சட்ட திருத்தத்தை மேற்கொண்டு, சிறார்களின் எதிர்கால வாழ்க்கையை காக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்திய- அமெரிக்க சிறார்களின் நலன் காக்க, அமெரிக்க எம்.பி.,க்கள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு 'இம்ப்ரூவ் தி டிரீம்' அமைப்பின் நிறுவனர் தீ படேல் நன்றி தெரிவித்துள்ளார்.