ஏன் இந்தியாவை விட்டு வெளியேறினேன்? நித்யானந்தா விளக்கம்
01 Dec,2021
ஏன் இந்தியாவை விட்டு வெளியேறினேன்? – நித்யானந்தா விளக்கம்
சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியுள்ள நித்யானந்தா, தன்னிடம் இந்தியாவை விட்டு ஏன் வந்தீர்கள்? என பல பேர் கேட்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு விளக்கம் கொடுத்துள்ள அவர், மூன்றாண்டுகளாக ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்திருப்பதாக பலர் கூறுவதாகவும், ஆனால், தான் மூன்றாண்டுகளாக அடிப்படை விஷயங்களை நிறுவிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சட்டரீதியாக தன்னை கைது செய்ய முடியாத அளவுக்கு சட்டப்பாதுக்காப்பை தான் உறுதி செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள நித்யானந்தா, தனக்கும் தன் சீடர்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக கூறியுள்ளார்.
ஆசாராம் பாபு, ராம் ரஹீம் மற்றும் காஞ்சி மடம், ஷிவ் சங்கர் பாபா ஆகியோருக்கு ஏற்பட்டவை குறித்து வருத்தம் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள நித்யானந்தா, கடந்த காலங்களில் இந்து மதம் எப்படி திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என ஆராயந்து வருவதாக விளக்கம் அளித்துள்ளார். இந்து மதம் தேன் கூடுபோல் அமைக்கப்பட்டிருந்தாலும், யாரோ ஒரு திருடன் திட்டமிட்டு அழித்து வருகிறான், கட்ட கட்ட அழித்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற விஷயங்களில் தனக்கு விருப்பமில்லை என கூறியுள்ள நித்யானந்தா, தான் கடினமான கோட்டையை கட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளார். தான் கட்டும் கோட்டையை யாராலும் அழிக்க முடியாது, அது இந்து மதத்தை பல ஆண்டுகள் உயிரிப்புடன் வைத்திருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 16 வயதில் பொது வாழ்வை தொடங்கி, 20 வயதின்போது இந்த சூட்சமத்தை அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ள நித்யானந்தா, இந்து மதத்துக்காக பேசக்கூடாது என யாரோ ஒருவர் விரும்புவதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கைலாசாவைப் பொறுத்தவரை பல நாடுகளுடன் நட்புணர்வு இருப்பதாகவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். கைலாசாவை யாராலும் அழிக்க முடியாது எனவும் அந்த வீடியோவில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.