மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் வீட்டில் திடீரென தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய உறவினர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, அவர் சொன்ன தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுபற்றி திலகர் திடல் போலீசில் புகாரும் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரை வில்லாபுரம் கதிர்வேல்நகரை சேர்ந்த மகேஷ் என்பவரது பிளாஸ்டிக் பைப் கடையில் நான் வேலை பார்த்து வருகிறேன். கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் மதுரையில் உள்ள தியேட்டரில் இரவு காட்சிக்கு பெற்றோர் அனுமதியுடன் சென்றேன்.
சினிமா முடிந்த பிறகு உரிமையாளர் மகேசுடன் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். பெரியார் பஸ் நிலையம் அருகே வந்தபோது 2 போலீஸ்காரர்கள் எங்களை வழிமறித்தனர்.
அதில் ஒருவர் திலகர் திடல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ்காரர் முருகன் (வயது 41) என்பதும், மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்த முத்துக்குமார் என்று கூறினர்.
விசாரணை என்ற பெயரில் பல்வேறு கேள்விகளை போலீஸ்காரர் முருகன் கேட்டார். பின்னர் கடை உரிமையாளர் மகேசிடம் இருந்த செல்போன், ரூ.11 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, ரகசிய குறியீடு எண், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றை பறித்துக்கொண்டு மிரட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
என்னை (இளம்பெண்) தான் பத்திரமாக கொண்டு போய் வீட்டில் விடுவதாக கூறிவிட்டு தன்னுடன் இருந்த ஊர்க்காவல் படை வீரரையும் வேறு பணிக்கு அனுப்பி விட்டார்.
அதன் பிறகு என்னை மிரட்ட தொடங்கிய அவர் விபசார வழக்கு போடுவேன். அதை தவிர்க்க வேண்டும் என்றால் நான் செல்வதை கேள் என கூறி நேதாஜி ரோடு பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதை வெளியில் சொன்னால் நடப்பது வேறு என எச்சரித்து ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, போலீஸ்காரர் முருகன் இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வது, விடுதிக்குள் செல்வது உறுதியானது.
கைது
மேலும் மகேசின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.30 ஆயிரத்தை போலீஸ்காரர் முருகன் எடுத்து இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ்காரர் முருகன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரை சஸ்பெண்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.