காவல் நிலையத்துக்கு தீ வைப்பு; போலீசார் மீது சரமாரி தாக்குதல் - பாகிஸ்தானில் பதற்றம்
29 Nov,2021
ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போலீஸ் நிலையம் ஒன்றுக்கு தீ வைத்து எரித்ததுடன், போலீசார் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சர்சதா மாவட்டத்தில் உள்ள மந்தனி காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கிருந்த கார்களுக்கும் தீ வைத்து, கட்டிடங்களை சேதப்படுத்தியதுடன், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் தெய்வநிந்தனை அல்லது கடவுளை பழிக்கும் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. தெய்வ நிந்தனையில் ஒருவர் ஈடுபட்டதாக தகவல் அல்லது வதந்தி பரவினாலும் கூட ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு நாச செயல்களில் ஈடுபட்டுவிடுவதுண்டு. இது போல வதந்திகள் காட்டுத்தீயாக பரவி ஏற்கனவே பல கும்பல் படுகொலைகள் நடைபெறக் காரணமாக இருந்திருக்கிறது. அவ்வளவு ஏன், தெய்வ நிந்தனையில் ஈடுபட்ட பெண்ணுக்கு பரிந்து பேசியதற்காக 2011ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் ஆளுநர் ஒருவர் தனது மெய்க்காப்பாளராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பழித்துப்பேசியதாக மனநலம் குன்றிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த விஷயம் காட்டுத்தீயாக பரவி ஆயிரக்கணக்கானவர்கள், மந்தனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கைதான நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூச்சல் போட்டனர். எனினும் போலீசார் அந்த நபரை அந்த கும்பலிடம் ஒப்படைக்காததால் ஆத்திரம் அடைந்த கும்பல் போலீஸாரை தாக்கத் தொடங்கினர்.