'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய, 2018 செப்., 9ல், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் கவனர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.இந்த தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல், தன்னை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்து, தமிழக உள்துறை இணை செயலர் பத்மநாபன் தாக்கல் செய்துள்ள மனு:
முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி, நளினி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி, நளினி தாக்கல் செய்த வழக்கும், விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடியாகி விட்டது.அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தண்டனை குறைப்பு தொடர்பாக, ஜனாதிபதி தான் முடிவெடுக்க தகுதியானவர். கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால், அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டது.உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில், இன்று விசாரணைக்கு வருகிறது.