அச்சுறுத்தும் 'ஒமிக்ரான்': சர்வதேச விமான போக்குவரத்து தடை மேலும் நீட்டிப்பு!
28 Nov,2021
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நேரத்தில் கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்த தடை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதே நேரம் 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காக இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பழையபடி சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து விமான போக்குவரத்து அமைச்சகம் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமிக்ரான்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் கவலை தரக்கூடியது என்று அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது.
இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளுடன் விமான போக்குவரத்துக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீட்டிக்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சர்வதேச விமான சேவையை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு மோடி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
பிரதமரின் இந்த அறிவுறுத்தலின்பேரில் சர்வதேச விமான போக்குவரத்து தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் விரைவில் இதற்கான முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.