12 டன் முந்திரியுடன் லாரி கடத்தல்: அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் கைது
27 Nov,2021
கன்னியாகுமரியில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 12 டன் முந்திரியை, லாரியுடன் கடத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்வதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள தனியார் முந்திரி ஆலையில் இருந்து 12 டன் (ரூ.1.10 கோடி மதிப்பு) எடை கொண்ட முந்திரியுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு லாரி சென்றது. ஹரி என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி லாரியை கடத்தினர். இது தொடர்பாக ஹரி, முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரன் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர், புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி டிஎஸ்பி சந்தீஸ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், கடத்தப்பட்ட லாரியை தீவிரமாக தேடினர். சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை வைத்து லாரியை போலீசார் தேடி வந்தனர். லாரி பின்னால் கார் ஒன்று தொடர்ந்து செல்வதை கண்டுபிடித்த போலீசார், லாரி, நாமக்கல் நோக்கி செல்வதை அறிந்து விரட்டி சென்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியில் திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் நின்ற காரில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அதில் இருந்தவர்கள் அதிமுக முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங்,விஷ்ணுகுமார், மனோகரன்,மாரிமுத்து ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி என்பதும், அவர்கள் தான் லாரியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்ததுடன், லாரியை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர். ஹரிகரன் புகார் அளித்து 12மணி நேரத்தில் லாரியை போலீசார் கண்டுபிடித்தனர்.