திருநெல்வேலியில் விடிய விடிய கனமழை; குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; வீடு சுவர் இடிந்து குழந்தை பலி
26 Nov,2021
திருநெல்வேலியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்தது. களக்காடு அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது பெண் குழந்தை பலியானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ.,25) பிற்பகல் முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இரவும் மழை தொடர்ந்ததால், நீர் பிடிப்புகளில் நீர்வரத்து அதிகரித்தது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர பகுதியில் 10.7 செ.மீ., மணிமுத்தாறில் 9.46 செ.மீ., சேரன்மகாதேவியில் 8.4 செ.மீ., பாபநாசத்தில் 8.1 செ.மீ., நம்பியாறு பகுதியில் 8 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 7.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவில் திருநெல்வேலியை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர். களக்காடு கீழபத்தையில் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.