வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுனர் நீதிமன்றத்தில் சரண்!
24 Nov,2021
கரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகன ஓட்டுனர் திருச்சி மாவட்டம் தோகைமலை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கரூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணி செய்து வந்தவர் கனகராஜ் கடந்த திங்கட்கிழமையன்று வெங்கல்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் தூக்கி எறியப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்தார்.
இந்நிலையில், எந்த வாகனம் மோதியது என்பது குறித்து கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில் திருச்சி மாவட்டம் தோகைமலையை சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக ஓட்டுநர் சுரேஷை பிடிக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட JM 1நீதிமன்றத்தில் நீதிபதி லலிதா ராணி முன்னிலையில் சரண் அடைந்தார்.
இதனைதொடர்ந்து நீதிபதி குற்றவாளி சுரேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.