சீனாவை சமாளிக்க இந்தியா போட்டுள்ள திட்டம்!
21 Nov,2021
சீனாவின் மிரட்டலை சமாளிக்க, ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ் - 400 ரக ஏவுகணைகளை அடுத்தாண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து எல்லையில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. தன்னுடைய எல்லைப் பகுதியில் சீனா, பல ஆயுதங்கள், தளவாடங்களும் குவித்து வருகிறது.
சீனாவின் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. எல்லை பதற்றத்தை தணிக்க பேச்சு நடந்து வரும் வேலையில், இந்தியா தன்னுடைய இராணுவ படைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ரக ஏவுகணைகளை வாங்கியது. முதல்கட்டமாக இரண்டு ஏவுகணைகள் வந்து சேர்ந்துள்ளன.
அவற்றை நிறுவுவதற்கு தேவையான சாதனங்கள் அடுத்த மாதத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சியும் ராணுவக் குழுவுக்கு ரஷ்யாவில் வழங்கப்பட்டு உள்ளது.
லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள தன் பகுதியில் சீனாவும் எஸ் - 400 ரக ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதையொட்டியுள்ள இந்திய எல்லையில் புதிதாக வந்துள்ள எஸ் - 400 ரக ஏவுகணைகளை நிறுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது