கோவை: இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவரை, பெங்களூருவில் கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் பெருந்துறை கிளைச்சிறையில் அடைத்தனர்.
இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா. கோவை, சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் ரகசியமாக வசித்து வந்தார். திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 4ல் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில், போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.
பீளமேடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கொட லொக்கா, இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை , கோவை சி.பி.சி.ஐ.டி, போலீசார் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்து, டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்றனர். பெங்களூரு, குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த, இலங்கை, அதுரகிரியாவை சேர்ந்த சனுக்கா தனநாயகா,38, பெங்களூரு, சுப்பையா பாளையத்தை கோபாலகிருஷ்ணன்,46, ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றிரவு கோவைக்கு அழைத்து வந்தனர். சி.ஜே.எம்., கோர்ட் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும், நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.