துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கை பார்வையிட்ட இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா-அமீரகம் இடையிலான பயணிகள் விமான போக்குவரத்து சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கூறினார்.
துபாயில் சர் பனியாஸ் பேரவையின் 12-வது பேரவை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று துபாய் வந்தார். அப்போது அவருக்கு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சகம், இந்திய தூதரகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சர் பனியாஸ் பேரவை கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து ஜெய்சங்கர் துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கை பார்வையிடுவதற்காக சென்றார். அங்கு அவருக்கு இந்திய அரங்கின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் அரங்கில் வைக்கப்பட்டுள்ள வர்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பார்வையிட்டார்.
இயல்பு நிலைக்கு திரும்பும்
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசியின் காரணமாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால் பயணிகள் விமான போக்குவரத்து சேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்தியா-அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இடையிலான பயணிகள் விமான போக்குவரத்து சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் 97 நாடுகளில் அவர்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமலும், ஒரு சில நாடுகளில் மட்டும் குறைந்த அளவில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளே பின்பற்றப்படுகிறது. இதேபோல் 5 வயதுக்குட்பட்டோர் பயணம் செய்யும் போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கும் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய முறையில்
இந்தியாவில் இதுவரை 110 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்.
எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கம் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் நூற்றாண்டு பழமையான கலாசாரம், இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்ட அதிகாரிகளுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தூதர்
இந்திய தூதர் பவன் கபூர் பேசுகையில், ‘‘உலக சுகாதார நிறுவனம் இந்தியாவின் கோவக்சின் கொரோனா தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும்.
இந்திய விமான நிலையங்களில் அமீரகம் செல்ல பயணம் செய்வதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாக செய்யப்படும் ஆர்டி-பி.சி.ஆர் கொரோனா பரிசோதனையை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அமீரக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன்புரி கூறுகையில், ‘இந்திய அரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் குறித்தும், கலை, கலாசாரம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருந்து வருகிறது. கர்நாடகா, லடாக், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்த அரங்கில் தெரிவித்தன’ என்றார்.
இதைத்தொடர்ந்து மந்திரி ஜெய்சங்கர் ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அரங்குகளையும் பார்வையிட்டார். அவருடன் இந்திய தூதர் பவன் கபூர், துணைத் தூதர் டாக்டர் அமன்புரி உள்ளிட்டோர் இருந்தனர்.
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கை நேற்று முன்தினம் வரை அதாவது 43 நாட்களில் மொத்தம் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அதிகம் பேர் பார்வையிட்ட அரங்குகளில் ஒன்றாக இந்திய அரங்கம் திகழ்கிறது.
அதிர்ஷ்ட குலுக்கல்
இதேபோல் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் உள்ள இந்திய அரங்குக்கு வரும் பார்வையாளர்கள் ‘அதிர்ஷ்ட குலுக்கல்’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.