புதிய காற்றழுத்தம்.. 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Nov,2021
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது