சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஐந்து தினங்களாக பெய்யும் தொடர் மழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. போக்குவரத்தின் முக்கிய கேந்திரங்களாக விளங்கிய 15க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு விட்டன.
வட சென்னை, கொளத்தூர், தி. நகர், மாம்பலம், வடபழனி, வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் எவ்வித போக்குவரத்தும் இயக்க முடியாத நிலையும், பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வீட்டுக்குள் வாழ முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இது மிக மிக அசாதாரணமான சூழல். மேடான பகுதிகளில் சில மின் மோட்டார்களை இயக்கி தண்ணீரை வெளியேற்றுவதால் மட்டும் சென்னை மக்களின் அவலநிலையைத் தீர்த்துவிட முடியாது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புகள் தாழ்வான பகுதிகளில் தான் மிக அதிகமாக இருக்கும்.
1967-லிருந்த ஏறக்குறைய 54 வருடம் தமிழகத்தில் கட்சிகளினுடைய ஆட்சியின் அலங்கோலம் தான் இன்று சென்னை வெளிக்காட்டும் வெள்ள அடையாளமாகும். தலைநகரில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு சில மேம்பாலங்களை மட்டுமே கட்டி, அதை மட்டுமே பொதுமக்களுக்குக் காட்டி ஓட்டுக்களை வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்திருக்கிறார்கள். சென்னை மாநகரம் 1947-க்கு பிறகு வேகமாக நகர் மயமாகி உள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ளனர்.
சென்னை தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், போர்ச்சுக்கல்காரர்களும் இந்தியாவில் காலடி வைத்த நாள் முதல் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகத் திகழ்கிறது. இது தமிழகத்தின் தலைநகர் என்பதையும் தாண்டி, உலக அளவிலும் எளிதாக அடையாளப்படுத்தக்கூடிய ஒரு நகரமாகும். ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை பெருநகரம் நான்கு நாள் மழையைக் கூட தாக்குப் பிடிக்காத அளவிற்கு தத்தளிக்கிறது எனில் இந்த அவலநிலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் கட்சிகள் மட்டுமே. அதிலும் கூடுதலாகப் பொறுப்பேற்க வேண்டியது ஆட்சியாளர்களே!.
2011-க்கு பிறகு 2021 வரை ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை எடப்பாடி அரசு என்ன செய்தது? என்பதும் தெரியவில்லை.
உணவுக்கும் உடைக்கும் அல்லல் படக்கூடிய லட்சக்கணக்கான சென்னை வாழ் மக்களுக்கு முதலில் பாதுகாப்பான இடங்களில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். முகாம்களில் தங்கும் அனைவருக்கும் சுகாதாரமான உணவு, குடிநீர், உடை, படுக்கை வசதிகள், போர்வைகள்; குழந்தைகளுக்கு பால், பால் பவுடர்கள், கொசு வலைகள் உள்ளிட்ட அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரைப்படத்தில் கூட ஒரே காட்சியை மக்கள் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புவதில்லை. வெள்ளத்தில் நடப்பதுபோல் போட்டோசூட் காட்சிகள் மக்கள் மனதில் வெறுப்பை தான் உண்டாகும். ”திருமண வீடானாலும் முதல் மாலை, மரண வீடு ஆனாலும் முதல் மாலை வேண்டும்” என்பதற்கு இணங்க இந்த வெள்ள காலத்திலும் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளில் செயல் அரசு இயந்திரங்களையும் ஈடுபடுத்துங்கள்.
அனைத்து நிவாரண பொருட்களும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு"அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.