சென்னையின் வரலாறு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ஆங்காங்கே சிறு சிறு கிராமங்களாக தோன்றி, மக்கள் பெருக்கத்தால் பரந்து விரிந்து நகரமாக உயர்ந்து, இன்றைக்கு மாநகரமாக ஓங்கி வளர்ந்து நிற்கிறது.
இப்போது, கோடை காலத்தில் குடிசைவாசிகள் குடத்துடன் தெருக்களில் குடிநீர் லாரிகளுக்காக காத்திருக்கும் அவலநிலையை ஒவ்வொரு ஆண்டும் காண்கிறோம். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளோ, நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவந்து தொட்டிகளில் நிரப்பி சிக்கனமாக பயன்படுத்தும் கட்டாய நிலையையும் பார்க்கிறோம். இது கோடையில் நிகழும் அன்றாட காட்சி.
படங்களே சாட்சி
அதேபோல், வடகிழக்கு பருவமழை காலத்தில், குடிசை பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுவதையும், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்வதையும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் பார்க்கிறோம். அதற்கு தற்போது பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் படங்களே சாட்சி.
பொதுவாக, மழை காலத்தை கிராமவாசிகள் இன்முகத்துடன் வரவேற்பார்கள். மழை வந்தால்தான், ஏரி, குளம், குட்டை போன்ற நீர் ஆதாரங்கள் நிரம்பும். பயிர் சாகுபடியும் பெருகி விவசாயிகளின் வாழ்வும் உயரும். எல்லோரும் உண்ண உணவு தானியங்களும் போதிய அளவு கிடைக்கும்.
என்ன காரணம்?
ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் மழை காலம் வந்தாலே மக்கள் அச்சம் அடையும் நிலைதான் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அவலநிலைக்கு என்ன காரணம் என்பதை காலம் கடந்தாலும் இனியாவது அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் கழிவுநீரை வெளியேற்றயும், மழைநீரை கடலுக்கு கொண்டு செல்லவும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. பல இடங்களில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டமைப்பாக இவை இருக்கின்றன. ஒரு தெருவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வீடுகளின் எண்ணிக்கைக்கும், தற்போது இருக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பல வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளாக உருமாறியுள்ளன. அப்படி பார்த்தால், 50 ஆண்டுகளில் வீடுகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டன.
ஆக்கிரமிப்பு
ஆனால், அத்தனை வீடுகளுக்குமான கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடை குழாய், 50 ஆண்டுகளுக்கு முந்தைய வீடுகளின் எண்ணிக்கையை ஏற்ப போடப்பட்ட சிறிய வடிவிலானதுதான். அது இப்போதைய வீடுகளின் எண்ணிக்கைக்கு எப்படி பொருந்தும்? எனவே, இவையெல்லாம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்டதால், மழை காலங்களில் வெள்ளநீர் தேங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பல ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல வழியின்றி தேங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
வாழும் தகுதியை இழக்கிறதா?
கடந்த காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாதது, ஆக்கிரமிப்புகள் ஆங்காங்கே அரங்கேறியது போன்ற விரும்பத்தகாத செயல்களால்தான் இன்றைக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இனியும் இக்கதை தொடர்ந்தால், முடிவு சோகமாகத்தான் இருக்கும். தண்ணீருக்குள் வாழ்க்கை நடத்தும் மக்களின் கண்ணீரையும் துடைக்க முடியாது.
எனவே, தமிழக அரசு பெரும் திட்டம் ஒன்றை வகுத்து, தயவு தாட்சண்யம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றியும், பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்தியும், மழைநீர் தேங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தினால், மக்கள் வாழும் தகுதியை சென்னை மாநகரம் இழந்துவிடும்.