நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும்.
இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும், அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.வினாடிக்கு 2,015 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119.00 அடியாக உயர்வு; வினாடிக்கு 18,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மகாபலிபுரம் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
மழை நீர் பெருக்கு காரணமாக சென்னையில் மூடப்பட்டடுள்ள சுரங்கபாதைகள்:-
* வியாசர்பாடி சுரங்கப்பாதை
* கணேஷபுரம் சுரங்கப்பாதை
* அஜாக்ஸ் சுரங்கப்பாதை
* கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
* மேட்லி சுரங்கப்பாதை
* துரைசாமி சுரங்கப்பாதை
* பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
* தாம்பரம் சுரங்கப்பாதை
* அரங்கநாதன் சுரங்கப்பாதை
* வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
* காக்கன் சுரங்கப்பாதை
மழை நீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது:-
* கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை
* மயிலாப்பூர்- டாக்டர் சிவசாமி சாலை
* ஈ வி ஆர்சாலை - காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை
* செம்பியம் - ஜவஹர் நகர்
* பெரவள்ளுர்- 70 அடி சாலை
* புளியந்தோப்பு - டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு