ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ஊழல்! விரைவில் நடவடிக்கை!
09 Nov,2021
அ.தி.மு.க., ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்ன ஆனது?'' இந்த திட்டத்தில் சொல்ல முடியாத அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்
சென்னையில் அதி கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. கடந்த 2 நாட்களாக வட சென்னை, தென்சென்னை, துறைமுகம், பெரம்பூர் போன்ற பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இன்று (நவ.,09) 3வது நாளாக தி.நகர், கொளத்தூர் பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளது. கடந்த ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெறப்பட்டும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. போதிய நடவடிக்கை எடுக்காமல் ஊழல் செய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் எஸ்.பி.வேலுமணி கமிஷன் மட்டுமே வாங்கியுள்ளார்.
தேங்கியுள்ள மழைநீரை அகற்ற தி.மு.க., கட்சி, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்பின்னர் பின்னர் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.