சென்னையில் மழை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
07 Nov,2021
சென்னையில் நேற்று முதல் விடாமல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலையிலும் நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் நிரம்பி ரோட்டுக்கு மேலே வழிந்தோடியது. பாதாள சாக்கடையும் மழைநீருடன் கலந்து ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பல இடங்களில் கறுப்பு நிறத்துடன் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் இதை கடக்க பெரிதும் சிரமப்பட்டனர். வாகன போக்குவரத்தும் பல இடங்களில் ஸ்தம்பித்தது. தொடர்ந்து மழைபெய்த வண்ணம் இருந்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை நகரமே இன்று காலை ஸ்தம்பித்தது.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். முதலில் அவர் எழும்பூர் பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதிகளையும் பார்வையிட்டார்.
புரசைவாக்கம், டவுட்டன், கே.என்.கார்டன், பட்டாளம், நியூபேலஸ் ரோடு, ஓட்டேரி நல்லாங்கால்வாய், அயனாவரம் நெடுஞ்சாலை, பாடி மேம்பாலம், சத்யாநகர், கொளத்தூர் பாபா நகர், ஜி.கே.எம்.காலனி, ஜவகர் நகர், பெரம்பூர் பேப்பர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நடந்து சென்றும் பார்வையிட்டார். நிவாரண முகாம்களையும் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.