சேலத்தில் கனமழை: ஏரி உடைந்து வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
05 Nov,2021
ஒவ்வொரு முறை மழை பெய்கின்ற பொழுதும் இதுபோன்ற பாதிப்பு அதிகரித்து வருவதாக, சேலம் டி.பெருமாபாளையம் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரி உடைந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. சில சிறிய வகை ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன. உணவு, உடை உள்ளிட்ட அனைத்தையும் மழைநீர் அடுத்து சென்றுவிட்டதாகவும், உணவு இன்றி தவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீர் முழுவதும் குடியிருப்புக்குள் புகுந்த 50க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதில் சில சிறிய வகை ஓட்டு வீடுகள் முழுவதும் இடிந்து விழுந்தன.அரிசி உணவு உடை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் அடித்துச் சென்று விட்டதாகவும் ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளும் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை கிராம மக்கள் தேடி வருகின்றனர்.
இங்கு உள்ள ஏரியின் உடைப்பை சரி செய்யாததால், ஒவ்வொரு முறை மழை பெய்கின்ற பொழுதும் இதுபோன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. வீடுகளை இழந்து உணவு இன்றி நாங்கள் சாலையில் தங்கியுள்ள நிலையில் அதிகாரிகள் இதுவரை இப்பகுதிக்கு வந்து எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை. மீட்புப் பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைநீரால் வீடு இடிந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த ஏரியை சரிசெய்ய ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.