பருவநிலை மாற்றம் மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பருவநிலை மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவி வினிஷா உமா சங்கர் பங்கேற்றார். திருவண்ணாமலையை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியான வினிஷா உமாசங்கர் சோலார் மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கினார்.
ரூ.40 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த வண்டியால் கரியின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கு எர்த்ஷாட் என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர். இதற்கிடையேதான் இளவரசர் வில்லியமின் அழைப்பை ஏற்று பருவநிலை மாற்ற மாநாட்டில் வினிஷா உமாசங்கர் பங்கேற்று பேசினார். அவர் மாநாட்டில் சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை பற்றி விவாதிக்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசியதாவது:-
நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்படத் தொடங்க வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் (உலக தலைவர்கள்) ஆதரிக்க வேண்டும்.
பழைய விவாதங்களை பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வை எங்களுக்கு தேவை. எனவே எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.
எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன். எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆனால் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். எங்களுடன் நீங்கள் சேராமல் இருந்தாலும் நாங்கள் வழி நடத்துவோம். நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் செயல்படுவோம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம்.
ஆனால் தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று.
வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற தவறிய தலைவர்கள் மீது எனது தலைமுறையினரில் பலர் கோபமாகவும், விரக்தியாகவும் உள்ளனர். கோபப்படுவதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் கோபப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. நான் செயல்பட விரும்புகிறேன்.
நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி மட்டுமல்ல. நான் பூமியில் இருந்து வந்த சிறுமி. நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழில் முனைவோர். மிக முக்கியமாக நான் ஒரு நம்பிக்கையாளர்.
இவ்வாறு அவர் பேசினார்.