அகதிகள் என்பதை மாற்றியிருப்பது மகிழ்ச்சி'
02 Nov,2021
இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் மேல்மொணவூர் முகாமை சேர்ந்த லூட்சு மேரி என்பவர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். கடந்த 31 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம். நீண்டகாலமாக எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. சொந்த வீடு என்பது எங்களுக்கு பெரும் கனவாக உள்ளது.
சரியான வீடு வசதி இல்லாததால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். 4 அல்லது 5 பேர் உள்ள குடும்பங்களில் படுக்க கூட இடமில்லை.
சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாததால் விறகு அடுப்பில் சமையல் செய்து பெண்கள் தவிக்கிறார்கள். எங்களுக்கு வீடு, கியாஸ் இணைப்பு போன்றவை கிடைக்க உள்ளது.
வீடு கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் உங்களில் ஒருவர் என கூறியது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் பாதியில் படிப்பை நிறுத்தியவள். வசதி இல்லாததால் பலர் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
தற்போது பணபலன் அதிகமாக உள்ளதால் கல்வி செலவை அரசே ஏற்கும் என்பதால் இலங்கைத் தமிழர்கள் பலர் படிக்க முடியும். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறியிருக்கிறார்கள்.
இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். இலங்கை அகதிகள் என்ற போர்வையில் இருந்து எங்களை மாற்றியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்