இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது.
Denmark-ஐ களமிறக்கும் பின்னணி | MK Stalin - Freddy Svane Meeting | Offshore Wind Power | Wind Farms
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய திமுக அரசு அமைந்ததில் இருந்தே முக்கியமான திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் அமைத்த பொருளாதார ஆலோசனை குழு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தொடங்கி உள்ளது.
சர்வதேச நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டை பொருளாதார சரிவில் இருந்து மீட்க இது பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
மீட்டிங்
இந்த நிலையில்தான் இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். நேற்று இந்த சந்திப்பு நடந்தது. தமிழ்நாட்டை ஒட்டி இருக்கும் வங்கக்கடல் பகுதியில் மிகப்பெரிய காற்றாலை மின்சார திட்டத்தை கொண்டு வரும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது. அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.
400 வருடம்
வரலாற்று ரீதியாகவே கடந்த 400 வருடமாக தமிழ்நாட்டுடன் டென்மார்க் பல்வேறு வர்க்கங்களை மேற்கொண்டு உள்ளதாக இந்த ஆலோசனையில் டென்மார்க் தூதுவர் தமிழ்நாடு அரசிடம் குறிப்பிட்டார்.இதையடுத்து தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகம் முழுக்க பல முன்னேறிய நாடுகளில் கடலில் காற்றாலை அமைக்கப்பட்டு உள்ளது.
காற்றாலை அமைப்பு
இதேபோல் வங்கக்கடலில் காற்றாலைகளை அமைத்து, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முடிவில் அரசு இறங்கி உள்ளது. இந்த சந்திப்பில் இது குறித்து விவாதம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் காற்று நிலையாக இருக்கும். இதனால் இந்தியாவிலேயே இங்குதான் கடலில்காற்றாலை அமைக்கும் திட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடியும், தமிழ்நாடுதான் இதற்கு சிறந்த தேர்வு என்று டென்மார்க் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டுபிடிப்பு
இந்த ஆலோசனையின் முடிவில் கடலில் காற்றாலை அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பின் இதற்கான அறிவிப்பு வெளியாகும். கடலில் காற்றாலை அமைப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. இதை டென்மார்க்கில் இருந்து கொண்டு வந்து இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளனர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு இதற்காக வெளியாகும். இதன் மூலம் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் இதனால் முன்னேற்றம் அடையும். கடலில் காற்றாலை அமைத்து, பெரிய ராட்சச குழாய்கள் மூலம் மின்சாரத்தை கரைக்கு கொண்டு வரும் திட்டமாகும் இது.
மாற்றம்
இதற்காக புதிய வகை காற்றாலைகளை உருவாக்க வேண்டும். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை மிகவும் தகுதி வாய்ந்த ஒன்றாக இருப்பதாக டென்மார்க் தூதுவர் ஃபெரெடி குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 13 டென்மார்க் நிறுவனங்கள் உள்ளதால் இந்த காற்றாலை திட்டம் உறவை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.