ஏர்போர்ட்'டில் 3 மாதம் ரகசியமாக வசித்த இந்தியர் விடுதலை
29 Oct,2021
நியூயார்க்: அமெரிக்க விமான நிலையத்தில் ரகசியமாக மூன்று மாதங்கள் வசித்த குற்றச்சாட்டில் கைதான இந்தியரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஆதித்ய சிங், 37, ஆறு ஆண்டுகளுக்கு முன், உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். அங்கு படிப்பு முடிந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒரு நண்பரின் வீட்டில் வசித்து வந்தார்.
நண்பரின் வயது முதிர்ந்த தந்தையை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்த ஆதித்ய சிங், 2020 அக்., 19ல் இந்தியா திரும்புவதற்காக சிகாகோவின் 'ஓ ஹேர்' விமான நிலையம் வந்தார்.இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக விமானத்தில் ஏறாமல், விமான நிலையத்திலேயே தங்கி விட்டார். அங்கேயே, கண்காணிப்பு கேமரா உட்பட யார் கண்ணிலும் படாமல் வசித்து வந்தார்.
விமான பயணியரிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை கழித்து வந்த ஆதித்ய சிங், ஒரு நாள் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கினார். அப்போது அவர், விமான நிலைய மேற்பார்வையாளர் ஒருவரின் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்; அது, காணாமல் போனதாக புகார் கொடுத்த விமான நிலைய அதிகாரி ஒருவரின் அடையாள அட்டை என்பது தெரிய வந்தது.
இது தொடர்பான புகாரில், இந்தாண்டு ஜன.,16ல் ஆதித்ய சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்ட விரோதமாக விமான நிலையத்திற்குள் வசித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு கூறப்படும் வரை அவருக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நிராகரிப்பு
அதில், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆதித்ய சிங் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்து, அவரை நீதிமன்றம் விடுவித்தது. எனினும் ஆதித்ய சிங், நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு முறை விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில், ஆதித்ய சிங்கிற்கு தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.ஆதித்ய சிங்கின் கதையைப் போல சில ஆண்டுகளுக்கு முன், 'ஹாலிவுட்' நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்த தி டெர்மினல் என்ற படம் வெளியாகி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.