பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
27 Oct,2021
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 7 மணி அளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் நாலா புறமும் வெடித்து சிதறின. அதோடு அருகில் இருந்த செல்போன் மற்றும் பேக்கரி கடைக்கும் தீ பரவியது.
பேக்கரி கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்தன. இதில் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் கடை அருகே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனிடையே காயமடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி நாசர் என்பவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக தகவலறிந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் ,வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்இதனிடையே, விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.