சிங்கப்பூர்: இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுக்குள் வைப்பது சிரமமாக உள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பிறகு ஆல்பா, டெல்டா போன்ற வகைகள் அடுத்தடுத்த கொரோனா அலைகளை ஏற்படுத்தியிருந்தது.
நீதித்துறை உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது.. தலைமை நீதிபதி என்.வி. ரமணா கவலை நீதித்துறை உட்கட்டமைப்பு மோசமாக உள்ளது.. தலைமை நீதிபதி என்.வி. ரமணா கவலை
இந்த உருமாறிய கொரோனா வகைகள் பல்வேறு நாடுகளிலும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும், அங்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளால் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளாத நாடுகளுக்கும் பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதையடுத்து அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மெல்லத் தளர்வுகளை அறிவித்து வந்தது. அதேநேரம் வெளிநாட்டு பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்தியா, வங்கதேசம், மியான்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளுக்குச் சென்று வருவோருக்கும் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இந்த தடை உத்தரவை நீக்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோர் சிங்கப்பூர் நாட்டில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரானஸிட் விசா மூலம் சிங்கப்பூர் வந்து அங்கிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக். 23ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.
அதேநேரம் இந்த நாடுகளில் இருந்து வருவோர் சிங்கப்பூர் நாட்டில் நுழைய விரும்பினால், அவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், தமிழர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது அந்நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.
சிங்கப்பூர் நாட்டில் கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை மட்டும் சிங்கப்பூரில் 3,800 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொடங்கியது முதல், அங்குப் பதிவு செய்யப்படும் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு இதுவாகும். இதையடுத்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கை ஒரு மாத காலம், வரும் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் கூட தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவது அங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேக்சின் பணிகளே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் மக்கள்தொகையில் இதுவரை 85% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 49.84% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.