மனித உரிமைகள் என்ற பெயரை தனியார் பயன்படுத்த கூடாது.. டிஜிபி சைலேந்திர பாபு
21 Oct,2021
மனித உரிமைகள் என்ற பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
மனித உரிமைகளை பேணவும், மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கவும், தேசிய அளவில் புதுடில்லியில் தேசிய மனித உரிமை ஆணையமும் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் முறையே சட்டப்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆனால் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துக்கொண்டு தங்களை தேசிய மற்றும் (மாநிஸ மனித உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருவதாக காவல்துறைக்கு நிறைய புகார்கள் வருகின்றன.
இந்நிகழ்வு, ஏற்கனவே அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975-ல் உரிய சட்டத்திருத்தம் பிரிவு 2-ல் பதிவு செய்யப்பட்டு "மனித உரிமைகள்" (Human Rights) என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 19 ஆணையின்படி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற சொல்லாடலை ஏற்கனவே தங்களது பெயர்களுடன் பதிவு செய்து பயன்படுத்தி வந்த அமைப்புகள் அச்சொல்லாடலை தங்களது பெயரிலிருந்து நீக்கவும், பிற்காலத்தில் அச்சொல்லாடலை சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதில் இருந்து "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.
மேலும், தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும் போது "இது ஒரு தனியார் அமைப்பு" என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும். ஆனால், அதன் பின்னும் "மனித உரிமைகள்" (Human Rights) என்ற வார்த்தையை பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தங்களை போலியாக அடையாளப்படுத்தி கொண்டும், வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்பலகை மற்றும் எஸ்டிக்காகளை (Name Board & Sticker) பொருத்தி கொண்டு தங்களை பொது அதிகாரர் அமைப்புகள் போல காட்டிக் கொண்டு வாகனங்களை இயக்கி வருவதாகவும், மற்றும் சிலர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டைகள் வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவமும் நடந்துள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே தேவை.
மேலும், வாகனங்களில் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுஞ்சில்" (Counsel) என்ற பெயர் கொண்ட எஸ்டிக்கர்கள் கொண்டு வாகனங்களை இயக்கினாலோ, தனியார் அமைப்புகள் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற பெயரில் செயல்பட்டாலோ மற்றும் "மனித உரிமைகள்" (Human Rights) அல்லது "ஒன்றியம்" (Union) அல்லது "மாநில" (State) அல்லது "கவுன்சில்" (Counsel) என்ற வார்த்தையை பயன்படுத்தி பொதுமக்களை நம்ப வைத்து போலியாக நிறி வசூ செய்வது, உறுப்பினர் மற்றும் போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகேடுகளில் செயல்பட்டால் அந்த அமைப்புகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்கவும். அவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரத்தினை தலைமையலுவலகத்திற்கு உடனடியாக தெரியப்படுத்தவும் இதன் மூலம் அனைத்து பிரிவு அலுவலர்கள் (All Unit Officers) அறிவுறுத்தப்படுகிறார்கள்.