முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள பயணிகளுக்காக நவம்பர் 8 முதல் சர்வதேச பயணத்தை அமெரிக்க அனுமதிக்க உள்ளது.
தொற்றுநோய் தற்போது குறைந்திருந்தாலும் பரவல் விகித அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு பலர் அதற்கேற்றவாறு தங்களது வெளிமாநில அல்லது வெளிநாட்டு டூரை திட்டம் செய்து வருகின்றனர். தொற்று குறைந்திருக்கும் இந்நேரத்தில் தங்கள் நாட்டில் சுற்றுலாவை அதிகரிக்க சர்வதேச பயணிகளை வரவேற்கும் நாடுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா தொற்று பொருளாதாரங்களில் குறிப்பாக முதன்மையாக சுற்றுலா துறையை நம்பியிருக்கும் நாடுகளுக்கு கடும் சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே கோவிட்-19 தொற்றை தொடர்ந்து சர்வதேசப் பயணத்தை கட்டுப்படுத்திய பல மாதங்களுக்கு பிறகு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உலக சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கள் எல்லைகளை பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறந்து வருகின்றன.
அதே போல பயண தடையால் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல முடியாமல் பலர் தவித்து வந்தனர், இந்நிலையில் பெரும்பாலான மக்கள் பரவலாக தடுப்பூசி போட்டு கொண்டிருப்பதால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா:
முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ள பயணிகளுக்காக நவம்பர் 8 முதல் சர்வதேச பயணத்தை அமெரிக்க அனுமதிக்க உள்ளது. இதன் போது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்க வரும் பயணிகள் நெகட்டிவ் RT-PCR சோதனை மற்றும் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதற்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை அமெரிக்க அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். அதே சமயம் தடுப்பூசி போடாதவர்களுக்கான வழிகாட்டுதல்கள் என்ன, அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையலாமா? என்பது பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
யுனைட்டெட் கிங்டம்:
முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டு இந்நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டதற்கான ஆவணங்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். மேலும், அங்கு சென்ற இரண்டாவது நாளில் RT-PCR பரிசோதனை எடுக்க வேண்டும்.
இலங்கை:
முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டிருந்தாலும் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட நெகட்டிவ் RT-PCR சான்றிதழ் மற்றும் ஒரிஜினல் தடுப்பூசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இலங்கை செல்லும் டூரிஸ்ட்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஹோட்டலில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். நாட்டிற்கு வந்தவுடன் மற்றும் தனிமைப்படுத்தல் முடியும் போது என 2 முறை RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டும்.
தாய்லாந்து:
வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 10 நாடுகளின் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் தனிமைப்படுத்தலின்றி, நெகட்டிவ் RT-PCR சோதனை சான்றிதழுடன் தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட உள்ளார்கள். ஆனால் இந்தியர்கள் தாய்லாந்து சென்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறை இருக்கும். இதன் போது முதல் நாள் மற்றும் 6-7 நாட்களில் RT-PCR பரிசோதனைகள் செய்து நெகட்டிவ் ரிசல்ட்டை காட்ட வேண்டும்.
பஹ்ரைன்:
சில நாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்ட விசிட்டர்களை அனுமதிக்க பஹ்ரைன் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியர்கள் முற்றிலும் தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட, பஹ்ரைன் சென்ற 5 மற்றும் 10-வது நாளில் RT-PCR சோதனைகள் கட்டாயம் ஆகும்.
எகிப்து:
முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட இந்தியாவிலிருந்து எகிப்து செல்லும் பயணிகள் அங்கு செல்வதற்கு முன்னதாக RT-PCR டெஸ்ட் செய்திருக்க வேண்டும். இந்த டெஸ்ட் எடுக்கப்பட்ட நேரம் 72 மணி நேரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிலி:
இங்கு செல்லும் பயணிகளுக்கு முழு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் நெகட்டிவ் RT-PCR சான்றிதழ் கட்டாயமாகும். சிலி பொது சுகாதார நிறுவனம், WHO, யுனைடெட் ஸ்டேட்ஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அல்லது ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் நீங்கள் போட்டு கொண்டிருக்கும் தடுப்பூசியை அங்கீகரித்திருக்க வேண்டும்.