ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்திற்காக செலவிடப்பட்ட தொகை 3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534
19 Oct,2021
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் குறித்து நெல்லையை சேர்ந்த வக்கீல் பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு இருந்தார்.
அதற்கு அரசின் பொது தகவல் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் கிடைத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2021-ம் ஆண்டு வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்காக இதுவரை ரூ.3 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 534 வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் வழக்கறிஞர்கள் கட்டணமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆணையம் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதாகவும், விசாரணை ஆணையம் இதுவரை 154 நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசால் கடைசியாக இந்த ஆணையத்தின் காலஅளவு 25.7.2021 முதல் 24.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு
இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணைக்கு இதுவரை ரூ.4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.