நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் 11வது பி-8ஐ போர் விமானம் இந்தியா வருகை
19 Oct,2021
புதுடில்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 11-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்திய கடற்பகுதியை கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
அதையடுத்து, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 9வது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரிலும், 10வது போர் விமானம் கடந்த ஜூலை மாதமும் இந்தியாவுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது 11வது பி-8ஐ போர் விமானம் கோவா வந்தடைந்துள்ளது. இந்த தகவலை போயிங் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
தற்போது இந்தியா வந்துள்ள இந்த விமானம் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியக் கடற்படையை பலப்படுத்துவதற்கும், இந்திய பெருங்கடலில் வலிமையை நிலைநிறுத்துவதற்கும் இந்த விமானம் பயன்படும் எனக் கூறப்படுகிறது.