போர்க்குற்றவாளியான இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்திரனராக அழைத்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் திறப்பு விழாவிற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை இந்திய மத்திய அரசு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் (Velmurukan) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த 2009இல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச சகோதர்களையும், சிங்கள இராணுவத் தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
சிங்கள பேரினவாத அரசால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் கோரிக்கை எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் 20 அன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கெளதம புத்தர் முத்தி அடைந்ததாக நம்பப்படும் திருத்தலமான குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் திறப்பு விழாவில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்கிறார். அப்போது, அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார்.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இலங்கையை அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளத்தில் புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை மத்திய அரசு சிறப்பு விருந்தினராக அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் மிச்செல் பச்லெட், கடந்த 2021 ஜனவரி 27 அன்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உள்நாட்டு புலனாய்வு விசாரணை வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.
ஆனால், தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையரின் பரிந்துரையையும் பொருட்படுத்தாமல், கோட்டாபய ராஜபக்சவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் மத்திய அரசின் செயல், இனப்படுக்கொலைக்கு துணைபோகும் நடவடிக்கையே ஆகும் - என்றுள்ளது.