-
10 ஆண்டு ஆயுள் தண்டனை முடித்த 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.அவர்களை விடுவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை ஆனால் சில விதிகளுக்கு உட்பட்டு தான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். தேசத்துரோகம், குண்டு வெடிப்பு போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். இன்னும் 20 நாட்களில் அதற்கான பட்டியல் தயாரிக்கப்படும். சிறை கைதிகளுக்கு மருத்துவம்,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.சிறைக்காவலர்களின் கூடுதல் பணி நேரத்திற்கான படி 200 ரூபாயிலிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “1,517 தண்டனை பெற்ற சிறைவாசிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ளனர் . ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் உள்ளது ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அடுத்தபடியாக நமது திருச்சி சிறைச்சாலை. அதே போல் சிறைவாசிகள் 8, 10, 12 போன்ற வகுப்புகள் தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். கல்லூரி படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகிறது.
உணவும்,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிறைக்கைதிகள் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக தி.மு.க அரசு உள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் தண்டனை காலம் முடிந்தவர்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்காது, அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது எனவே தான் அவர்களை சிறப்பு முகாமிலேயே வைத்துள்ளோம்.
கூடுதல் நேரம் பணி செய்யும் சிறைக்காவலர்களுக்கான படியை 200 ரூபாயிலிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்பதற்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில் சிக்கல் ஏதுமில்லை. வெடிகுண்டு வழக்கு, தேச துரோக வழக்கு போன்ற கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது. அவர்களை விடுவிப்பதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. யார் யாரை விடுதலை செய்யலாம் என்கிற பட்டியலை தயார் செய்து வருகிறோம்.பட்டியல் தயாரிப்பு பணி முடிய இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகலாம்.
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.அதை அவரது லட்சியமாக வைத்துள்ளார். அவர்களை விடுதலை செய்ய அரசு முழு முயற்சி எடுக்கும். ஏழு பேரில் ரவிசந்திரன் என்பவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.மருத்துவ வசதி மறுக்கப்படுவதில்லை, நல்ல சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.
இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.