ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த சொத்துகள், அவர் சரியாக உயில் (Will) எழுதிச் செல்லவில்லை என்றால், அவர் இந்த உலகில் இல்லாத போது குடும்ப உறுப்பினர்கள் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தலாம். அவர்களுக்குள் சண்டை, சச்சரவு, பகை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர்க்க ஒரு விரிவான உயில் எழுதுவது அவசியம். இதன் மூலம் உடன்பிறந்தவர்கள் இடையே உறவு சீராகத் தொடர்வதை உறுதி செய்வது பெற்றோரின் கடமை மற்றும் பொறுப்பாகும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான முறையில் சொத்தைப் பிரித்துக் கொடுக்காமல் செல்லும் பெற்றோர்களால் குடும்பத்துக்குள் பல சச்சரவுகள் ஏற்படலாம். அதை தவிர்ப்பது எப்படி?
1. நியாயமாகப் பிரித்துக் கொடுக்கவும்
நியாயம் என்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சொத்தை சமமாகப் பிரித்துக் கொடுப்பது என்பதல்ல. உண்மையில் நியாயம் என்பது குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு என்ன திறமை, தகுதி, வசதி வாய்ப்புகள் இப்போது இருக்கின்றன என்பதற்கு ஏற்ப பிரித்துக் கொடுப்பதாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பிரித்துக் கொடுப்பது குடும்ப உறுப்பினர்கள் இடையே மனக் கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, நியாயத்தை விளக்குவது பெற்றோரின் பொறுப்பாகும்.
ஏன் இப்படிப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை உயிலில் விரிவாக எழுதி வைப்பது நல்லது. முடிந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அமரவைத்து அவர்களிடம் விளக்கிச் சொல்லி விஷயத்தைப் புரிய வைத்து அதன்படிகூட செல்வம் மற்றும் சொத்துகளைப் பிரித்து உயில் எழுதி வைக்கலாம்.
உதாரணத்துக்கு ஒருவருக்கு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு இரு மகன்கள் இருந்தால் யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கேட்டு தெளிவுபடுத்தி, அதன் அடிப்படையில் உயில் எழுதி வைப்பது நல்லது.
இதனால், பிற்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவு ஏற்படுவது தடுக்கப்படும். இது குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் தொழில் மற்றும் வணிகத்துக்கும் பொருந்தும்.
2. அனைத்து சொத்துகளையும் பட்டியலிடுங்கள்
உயிலில் அனைத்து சொத்துகளையும் பட்டியலிடாமல் இருப்பது மற்றும் ஏற்கெனவே எழுதிக் கொடுத்த சொத்து விவரங்களை உயிலில் எழுதாமல் விடுவது குடும்ப உறுப்பினர்கள் இடையே சண்டை, சச்சரவு உருவாகக் காரணமாக இருக்கக்கூடும். உதாரணத்துக்கு, கல்யாணமான மூத்த மகனுக்கு சொந்த வீடு கட்ட, 3 சென்ட் நிலம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விவரம் உயிலில் இடம் பெற்றிருக்காது. இதை மனதில் வைத்து அவருக்கு சொத்தில் மனை எதுவும் கொடுக்காமல் உயில் மூலம் எழுதி வைக்கப்பட்டிருக்லாம். இந்த நிலையில் அந்த மூத்த மகன் எனக்கு உயிலில் மனை இடம் எதுவும் எழுதி வைக்கவில்லை. எனக்கும் மனை இடத்தில் பங்கு வேண்டும் எனப் பெற்றோரின் மறைவுக்குப் பிறகு, பிரச்னை செய்யக் கூடும். எனவே, ஏற்கெனவே கொடுக்கப்பட்ட சொத்துகளையும் உயிலில் குறிப்பிடுவது மூலம் குடும்ப உறுப்பினர்கள் இடையே உங்களின் மறைவுக்குப் பிறகு, பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
3. உயிலை அமல்படுத்துபவரை நியமியுங்கள்
உயில் சரியாக அமல்படுத்தப்பட, அதற்கென சரியான அமல்படுத்துபவரை நியமிப்பது கட்டாயமாகும். இந்த உயில் அமல்படுத்துபவர் (Will Executioner) குடும்ப நண்பர், நம்பகமான நிதி ஆலோசகர், குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர் என யாராக வேண்டுமானலும் இருக்கலாம்.
இவர்களில் யாராக இருந்தாலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் இடையே நியாயமாக நடந்துகொள்பவர்களாக இருப்பது அவசியம். மேலும், அவர் அனைத்து குடும்ப உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பது அவசியம்.
4. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவும்
உயில் என்பது உங்களின் சொத்துகளின் சட்டப்படியான பிரகடனம் (legal declaration) ஆகும். உயில் குறித்து ஏதாவது பிரச்னை வந்தால், பதிவு செய்யப்பட்ட உயில் என்றால், உயிலில் உள்ளபடி அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒரு உயில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபப்ட வேண்டும். இந்த உயிலில் இரண்டு சாட்சிகள் கையொப்பம் செய்ய வேண்டும். மேலும், உயிலை எழுதியவர் நல்ல மனநிலையில் இருக்கும்போதுதான் இதை எழுதினார் என மருத்துவர் ஒருவர் சான்று அளிக்க வேண்டும்.
இந்த வழிகளை பெற்றோர்கள் சரியாகப் பின்பற்றும் பட்சத்தில் சொத்து விஷயத்திற்காக குடும்பத்தில் தகராறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.