கவர்னர் ரவி - டி.ஜி.பி., சைலேந்திர பாபு சந்திப்பு: தீவிரவாத செயல்களை குறித்து ஆலோசனை
10 Oct,2021
சென்னை: சமீபத்தில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு, கவர்னர் ரவியைச் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.தமிழகத்தில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் அந்த நகரத்தின் மீது அதிக கவனம் தேவை என, டி.ஜி.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம்.
கனடா நாட்டிலிருந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள், இந்த நகரத்தில் உள்ள சீக்கியர் சிலருக்கு பணம் அனுப்பி, காலிஸ்தான் பிரிவினை தொடர்பாக உசுப்பேற்றி வருவதாக சொல்லப்படுகிறது.இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக கவர்னரிடமும், தமிழக அரசிடமும் பேசியுள்ளார். இதனால் தான் கவர்னர், டி.ஜி.பி.,யை அழைத்து ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த போது காலிஸ்தான் தொடர்பாக பேசியுள்ளார்.'கனடா நாட்டில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர், பஞ்சாபை காலிஸ்தானாக மாற்ற வேண்டும் என தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகின்றனர்.
'இதற்காக சீக்கியர்கள் எங்கெங்கு வசித்து வருகின்றனரோ, அங்கு பணம் அனுப்பி வருகின்றனர்' என, அமரீந்தர் சிங் கூறியுள்ளார். இதனால் தான் தமிழகத்திற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம்.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திலும் காலிஸ்தானுக்கு தொடர்புஉள்ளது என்கின்றனர்.