இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்க அரசு முடிவு செய்திருக்கிறது.
ஏர் இந்தியாவை விற்பதற்கான ஏலத்தில் டாடாவின் ஏல விருப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தது டாடா.
இது அரசு அறிவித்திருந்த ரிசர்வ் தொகையான 12,906 கோடி ரூபாயைவிட அதிகம் என்று முதலீடு, பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
டாடாவின் விமான நிறுவனத்தை இந்திய அரசு கையகப்படுத்தி தேசிய விமான சேவையாக ஏர் இந்தியாவை நடத்தி வந்தது. இப்போது அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா வசமாகிறது.
விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவை வாங்கி முதல் ஆண்டில் எந்த ஊழியரையும் டாடா பணி நீக்கம் செய்ய முடியாது. இரண்டாவது ஆண்டில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விற்பனை ஒப்பந்தப்படி 5 ஆண்டு காலத்துக்கு ஏர் இந்தியாவின் இலச்சினையையோ, பிராண்டையோ வேறு யாருக்கும் டாடா மாற்றித் தரக்கூடாது. 5 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ஓர் இந்தியருக்கு மட்டுமே மாற்றித் தரலாம்.
ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளை டாடாவுக்கு விற்பதன் மூலம் அரசுக்கு பணமாக ரூ.2,700 கோடி வரும் என்றும் தெரிவித்துள்ளார் முதலீடு, பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர்.
இதனிடையே, அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் தங்கள் வசமாவதை உணர்ச்சிபூர்வமாக குறிப்பிடும் வகையில் 'வெல்கம் பேக்' (மீண்டும் வருவது நல்வரவாகட்டும் என்ற பொருளில்) என்று ட்வீட் செய்துள்ளார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும், டாடா டிரஸ்டின் தலைவருமான ரத்தன் டாடா.
முன்னோடி முயற்சியும், சுதந்திர இந்தியாவின் கனவும்
இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்கவேண்டும் என்று 2001ம் ஆண்டு முதல் இந்திய அரசு முயற்சி செய்துவருகிறது.
ஆனால், இழப்பை சந்தித்துவரும் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு சரியான ஆளை இந்திய அரசால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதற்கிடையே ஏர் இந்தியாவுக்கு ஏராளமான கடனும் சேர்ந்துவிட்டது.
தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா மூலம் இந்திய அரசுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.200 கோடி இழப்பு ஏற்படுகிறது.
இதுவரை ஏர் இந்தியா மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி என்று கடந்த காலங்களில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விமான எரிபொருள் விலை அதிகமாக இருப்பது, விமான நிலையப் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாக இருப்பது, குறைந்த கட்டண விமான சேவைகளின் போட்டி, ரூபாய் மதிப்பு குறைவு, அதிகமான வட்டி விகிதம் ஆகியவையே இழப்புக்கான காரணம் என்று ஏர் இந்தியா கூறி வந்ததது. 2018-19 நிதியாண்டின் இறுதியில் ஏர் இந்தியாவின் கடன் உள்ளிட்ட பொறுப்புகள் ரூ.70,686.6 கோடியாக இருந்தது.
பொதுத் துறை உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்சுடன் 2007ல் இணைக்கப்பட்டதில் இருந்து ஏர் இந்தியா லாபகரமாக இயங்கவில்லை.
தாம் விற்பனை செய்ய முன்வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்திய அரசு விரும்பியது. இதனால், வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இதையடுத்து ஏர் இந்தியாவின் 100 சதவீதப் பங்குகளையும் விற்க 2020 ஜனவரியில் விருப்பம் தெரிவித்தது அரசு.
ஆனால், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக இந்த விற்பனை நடைமுறை தாமதமானது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விற்பனை நடைமுறையில் நிதி சார்ந்த ஏலங்கள் வந்து சேர செப்டம்பர் 15ம் நாள் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஏலங்கள் வரப்பெற்றதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது. டாடா சன்ஸ் நிறுவனம் தாங்கள் ஏலம் கோரியுள்ளதாக தெரிவித்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஏலம் கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் எழுதின.
ஏர் ஏசியா, விஸ்தாரா விமான நிறுவனங்களில் ஏற்கெனவே டாடா நிறுவனத்துக்குப் பங்குகள் உள்ளன.
1932ம் ஆண்டு இந்தியாவில் டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. இந்தியாவில் வணிகரீதியிலான விமான நிறுவனத் தொழிலின் முன்னோடி அது.
1947ம் ஆண்டு விடுதலை அடைந்த இந்தியா என்ற இளம் குடியரசுக்கு ஒரு தேசிய விமான நிறுவனத்தை நடத்தும் கனவு தோன்றியது. அதற்காக 1953-ம் ஆண்டில் டாடா ஏர்லைன்சை கையகப்படுத்திய இந்திய அரசு அதற்கு ஏர் இந்தியா என்று பெயர் சூட்டி நடத்திவருகிறது.
கடன்களும், இழப்புகளும் இருந்தாலும் ஏர் இந்தியாவுக்கு சில மதிப்பு மிக்க சொத்துகளும் உள்ளன. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மதிப்பு மிக்க இடங்கள் அதற்கு உள்ளன. இது தவிர, 100க்கு மேற்பட்ட விமானங்களும், ஆயிரக் கணக்கான பயிற்சி பெற்ற விமானிகளும், பணியாளர்களும் அதனிடத்தில் உள்ளனர்.